20 வருடங்களாக கழிப்பறையில் வசித்து வரும் தமிழ்ப் பெண் : கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்!!

20 வருடங்களாக கழிப்பறையில் வசித்து வரும் தமிழ்ப் பெண் : கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்!!

தமிழகத்தில் பெண்ணொருவர் 20 ஆண்டுகளாக பொது கழிப்பறையில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் கருப்பாயி.

இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் அனைத்து உறவுகளாலும் கைவிடப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக மதுரை அருகே அனுப்பானடி பேருந்து நிறுத்தம் பக்கத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பறை வளாகத்தில் வசித்து வருகிறார்.

கழிப்பறைக்கு வரும் பொதுமக்கள் தரும் சில்லறை மற்றும் ரேஷனில் கிடைக்கும் அரிசியை வைத்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைத்து சாப்பிடுவதாக கண்ணீர் மல்க கவலையுடன் அவர் தெரிவிக்கிறார்.

முதியோர் உதவித் தொகைக்காக சில இடை தரகர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும், இதுவரை எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வருவதாகவும் கருப்பாயி கூறியுள்ளார்.

கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிப்பறை மூடப்படும் போது எந்தவித வருமானமும் இல்லாமல் பசியோடு வாழும் நிலை ஏற்படுவதால், அரசால் வழங்கப்படும் முதியோர் உதவி தொகை கிடைத்தால் பட்டினியை போக்கிக்கொள்ள முடியும் என்கிறார் கருப்பாயி.

இது தொடர்பான செய்தி வருவாய்த்துறை அதிகாரிகளிக்கு சென்ற நிலையில் கருப்பாயியிடம் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.

You might also like